திமுக தலைவர் ஸ்டாலின் உருவப்படம் பொறித்த, “ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப் போராரு” என்ற விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் அனுமதி பெற்று 9 ஆயிரத்து 500 பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் விளம்பர பதாகைகளை அகற்ற சென்றனர். விளம்பர பதாகைகளை மாநகராட்சி வண்டியில் ஏற்றிய சூழ்நிலையில், திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் நாகராஜன் தலைமையில் திமுகவினர் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பதாகைகளை கீழே இறக்கினர்.
அப்போது அலுவலர்களிடம் பேசிய தெற்கு மாநகர பொறுப்பாளர், அலுவலர்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், இன்னும் 30 நாள்களே உள்ளது எனவும் எச்சரிக்கை செய்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே தேர்தல் பணியை செய்யவிடாமல் தடுத்ததாக தேர்தல் அலுவலர் சார்பில் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் திமுகவின் தெற்கு மாநகர பொறுப்பாளர் நாகராஜன் உட்பட 15 பேர் மீது புகார் கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: எங்களுடன் சேர்ந்து பயணிக்க விருப்பமா... இன்னும் 3 நாள்கள் நேரம் தருகிறேன் - கமல்