திருப்பூர்: தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் கனரா வங்கியில் ஊழியர்கள் காலை 10 மணியளவில் வழக்கம் போல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 12:54 மணியளவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், திடீரென போலி வெடிகுண்டை கண்ணாடியில் மாட்டிவிட்டு, துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களை மிரட்டி கொள்ளையடிக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். இருப்பினும் வங்கியில் இருந்த பொதுமக்கள் அவர் கையில் இருந்த கத்தி கீழே விழுந்ததை எடுக்க முயற்சி செய்தபோது வாடிக்கையாளர் ஒருவர் தன் தோளில் இருந்த துண்டை போட்டு திருடனை மடக்கிப் பிடித்தார்.
இதையடுத்து, வங்கி அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அலங்கியம் காவல் துறையினர், கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை கைது செய்தனர். அவரிடம் இருந்த பொம்மை துப்பாக்கி மற்றும் போலி வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளைஞர் அலங்கியம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (19) என்பதும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும், தனியார் ஆன்லைன் ஆப் மூலமாக பொம்மை துப்பாக்கி மற்றும் போலி டைம் பாம் ஆகியவற்றை வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
சமீபத்தில் நடிகர் அஜித் நடித்த துணிவு படத்தை பார்த்து அதில் வருவது போல் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து வங்கி மேலாளர் சுகந்தி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சுரேஷை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திரைப்படத்தைப் பார்த்து கல்லூரி மாணவர் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி தாராபுரம் அலங்கியம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: தாய் கடத்தல்; மகன் அளித்த புகாரில் 5 மணிநேரத்தில் மீட்டுத்தந்த போலீஸ்