கரோனா பரவல் காரணமாக, மாநிலம் முழுவதும் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும்; முகக்கவசம் அணியத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் திருப்பூர்-பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்த தம்பதியிடம் பெருமாநல்லூர் காவலர் அபராதம் விதிக்க அவர்களுடைய விவரங்களை சேகரித்தபோது, சாதியின் பெயரைக் கேட்டதால் ஆத்திரமடைந்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'எதற்கு சாதிப் பெயரைக் கேட்கிறீர்கள். அபராதம் விதித்தால் கட்டிச் செல்கிறோம். இதுதான் முறையா?' என்று அந்த தம்பதி காவலரிடம் முறையிட்டனர்.
தற்போது இதுகுறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக குற்றவாளிகள் கைது செய்யப்படும்போது சாதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால், முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் சாதிப் பெயரைக் கேட்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
சமூக வலைதளத்தில் வெளியான இந்த வீடியோ காட்சிக்குப் பதிலளித்துள்ள மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வாகனச்சோதனையில் ஈடுபட்ட வேலுச்சாமி, நடராஜன், கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
இதையும் படிங்க: ஒரே தொகுதியில் 8 முறை மக்களின் உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்ட பஸ்வான்!