திருப்பூர்: பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் தாய், மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருபவர் மோகன்ராஜ். இந்த நிலையில் நேற்று முன்தினம் (செப். 3) சிலர், மோகன்ராஜின் வீட்டிற்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற மோகன்ராஜ் எதற்காக எங்களது வீட்டிற்கு அருகே அமர்ந்து மது அருந்துகிறீர்கள்? என அவர்களிடம் கேட்டுள்ளார்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பி சென்ற மர்மநபர்கள் மீண்டும் மோகன்ராஜின் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டில் இருந்த மோகன்ராஜை வெளியே அழைத்து, இது தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் மர்மநபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மோகன்ராஜ், மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், சகோதரர் செந்தில்குமார் ஆகியோரை கொடூரமாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த கொடூர தக்குதளில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், மோகன்ராஜின் சகோதரர் செந்தில்குமாரிடம் ஓட்டுநராக பணி புரிந்த திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. மேலும் இந்த கொலை வழக்கில் திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடேஷ், திருச்சியைச் சேர்ந்த செல்லமுத்து, தேனியைச் சேர்ந்த சோனை முத்தையா ஆகியோர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிசிடிவி காட்சிகளிலும் மோகன்ராஜ் மகன் அளித்த சாட்சியத்திலும் நான்கு நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. அதனை அடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரையும் போலீசார் தேடி வந்தனர். இதில் திருச்சியைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை தொட்டம்பட்டி வாட்டர் டேங்க் மேல் மறைத்து வைத்திருப்பதாக கூறி மேல் ஏறிச் செல்லும் போது பின்னே சென்ற போலீசாரை தள்ளிவிட்டு செல்லமுத்து குதித்து தப்பி செல்ல முயற்சி செய்ததாகவும். அப்போது கால் முறிவு ஏற்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, நான்கு பேரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் செல்லமுத்து தற்பொழுது பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு: அதிமுக நிர்வாகிகள் இருவர் கைது!