ரஷ்யாவில் மருத்துவம் படித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி வோல்கா நதிக்குச் சென்றபோது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் உடல்கள் 11 நாள்களுக்குப் பிறகு நேற்று (ஆக.21) சென்னை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து மாணவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அரசு அவசர ஊர்தி மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. இந்நிலையில் தாராபுரத்தைச் சேர்ந்த மாணவர் முகமது ஆசிக் உடல் 12 நாள்களுக்குப் பிறகு இன்று (ஆக.22) அதிகாலை 4 மணிக்கு சொக்கநாதபாளையம் வந்தடைந்தது. மாணவரின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.
தங்களது மகனின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு எடுத்து வர உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டனர். அப்பகுதி முழுவதும் சோகத்துடன் காணப்பட்டது.