திருப்பூர் யூனியன் மில் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பரப்புரைக் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "இந்தியாவில் மோடி அரசாங்கம் மிகப்பெரிய அளவில் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை அரங்கேற்றி வருகிறது.
அதற்கு உடந்தையாக அதிமுக செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடமாக ஊரடங்கு காலத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையில் மாத வருமானம் மூன்று ஆயிரத்திற்கும் குறைவாக மாறி உள்ளது. ஆனால், ஒரு சிலரின் சொத்து மதிப்பு மட்டும் 40 விழுக்காட்டிற்கும் மேலாக உயர்ந்துள்ளது. இதே போலத்தான் நாடு முழுவதும் பணக்கார இந்தியா ஆகவும் ஏழை இந்தியா ஆகவும் பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.
இந்நிலை மாற வேண்டுமெனில் பாஜகவையும் அவர்களோடு சரணாகதி அடைந்துள்ள அதிமுக அரசையும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்கடித்து இந்தியாவிற்கு முன்மாதிரி மாநிலமாக, தமிழ்நாடு பாஜகவின் கொள்கைகளை நாங்கள் உள்வாங்கவில்லை என்ற கருத்தை முன்மொழிய வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி சுய சார்பு இந்தியா என முழக்கமிட்டுக் கொண்டு ரிலையன்ஸ், அம்பானி, அதானிகளுக்கான இந்தியாவை உருவாக்கி வருகிறார். திராவிட கலாசாரத்தில் வந்தவர்களாக அதிமுகவினர் கூறிக்கொண்டு திராவிட கொள்கைகளுக்கு எதிராக பாஜகவின் கொள்கைகளை கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியை மக்கள் ஆதரித்து வெற்றிபெறச் செய்வதன் மூலம் தமிழ்நாட்டையும் இந்தியாவையும் பாதுகாக்க முடியும். அதன் மூலம், நாளை வளமான இந்தியாவை உருவாக்க முடியும். இந்நிகழ்ச்சியில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வசூலிக்கப்பட்ட கட்சி நிதி வசூலும் பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதையும் படிங்க: திமுக-அதிமுக தொகுதிப்பங்கீடு இழுபறி: கூட்டணி கட்சிகளின் கோரிக்கை என்ன?