திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் அதே பகுதியில் அரிசி மண்டி நடத்தி வருகிறார் . இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில், நேற்றைய தினம் காலை கடையை திறந்தபோது, கடையின் பின்பக்க வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் யாரோ கடையின் சிசிடிவி கேமராவை திருப்பி வைத்ததோடு, கல்லாப் பெட்டியில் இருந்த ஒன்பது லட்ச ரூபாய் பணம் , சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகும் கணினி,ஹர்ட் டிஸ்க் ஆகியவற்றையும் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சண்முகம் கொடுத்த புகாரின்பேரில் போலீசார், கைரேகை நிபுணர்களின் மூலம் கடையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்தனர். இதில் அந்த அரிசி மண்டியில் லோடு மேனாக வேலை பார்த்த சரத்குமார் என்பவரே இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடையில் வேலை செய்த நபரே பணத்தைத் திருடிய சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.