ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் பணியிடைநீக்கம், பணிமாறுதல் செய்யப்படும் என அரசு மிரட்டல் விடுத்தது.
இதைத் தொடர்ந்து பல இடங்களில் போராட்டத்தை கைவிட்ட ஆசிரியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர்.
இந்நிலையில், போராட்டத்தை முடித்துவிட்டுப் திரும்பிய, வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு ஆசிரியரான சுரேஷ் என்பவரை பெரிச்சிபாளையம் அரசுப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
இதனையடுத்து பணிமாறுதலுக்கான உத்தரவு நகலை பெறப் பள்ளிக்கு வந்த ஆசிரியர் சுரேஷை, மாணவர்கள் அழுதுகொண்டே சூழ்ந்து கொண்டனர். அவரை இந்தப் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாறுதல் செய்து அனுப்ப வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
இதனிடையே ஆசிரியர் சுரேஷை பணிமாறுதல் செய்யக்கூடாது என பெற்றோர்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.