திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ஹேம லதாவிடம்(16) பல்லடம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் டிக் டாக் மூலம் அறிமுகமாகி பழகியுள்ளார். டிக் டாக் செயலியில் அறிமுகமான அவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
இதையடுத்து ஆறுமுகத்தின் மகள் ஹேமலதா கர்ப்பம் ஆகியுள்ளார். வெளியே தெரிந்தால் அவமானம் எனக் கருதிய ஹேமலதா கடந்த டிசம்பர் மாதம் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஹேமலதாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
ஆனால், சிகிச்சைப் பலனின்றி கடந்த 27ஆம் தேதி ஹேமலதா உயிரிழந்தார். இதையடுத்து, வேல் முருகனை மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இந்நிலையில் வேல் முருகனை பிணையில் வெளிவர முடியாதபடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சமூக சீரழிவிற்கு காரணமான டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் கொள்ளையடிக்கும் கும்பலிடமிருந்து 85 சவரன் நகைகள் மீட்பு