திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் பகுதியில் பிஏபி பாசனத் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (மார்ச்2) நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், "ஆணைமலையாறு நல்லாறு திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பாசன அமைப்புகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும். காண்டூர் கால்வாயில் பிரதான கால்வாய், கிளை கால்வாய் பகுதிகளில் சிதலமடைந்த பகுதிகளை சீரமைத்து தர வேண்டும்.
பரம்பிகுளம் ஆழியாறு திட்டத்திற்கு தொழில்நுட்ப குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டமானது நடைபெறுகிறது. பிஏபி பாசன கால்வாயின் மூலம், ஒரு மண்டலத்திற்கு மட்டும் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் நிலையில், மேற்கூறிய திட்டங்களை நிறைவேற்றும் பட்சத்தில் சுமார் 25 ஆயிரம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நூதனப் போராட்டம்!