திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் குடிநீர் பிரச்னைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் தலைமையில் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 36 ஊராட்சி செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில் ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனரும் பங்கேற்றார்.
பின்னர் கரைப்புதூர் நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பல்லடம் ஊராட்சி ஒன்றியம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் ஆகிய 2 ஒன்றியங்களில் பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்கக்கூடிய குடிநீரின் அளவு குறித்து ஆய்வு செய்து எந்தெந்த பகுதிகளில் குறைவான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறதோ அங்கு எல்லாம் அதிக அளவில் குடிநீர் விநியோகிக்க, குடிநீர் வடிகால் வாரியத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைகளை தீர்க்க போர்க்கால நடவடிக்கையாக அந்தப் பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைப்பது, பழுதடைந்துள்ள மின் மோட்டார்களை சரி செய்வது, பழுதடைந்த பைப் லைன்களை சரிசெய்வது, புதிய பைப்லைன்களை அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் பல்வேறு பணிகளை மேற்கொள்ள கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது" என்றார்.