திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபிராஜ். இவர் தனது மகள் வளர்மதி, பேத்தி நிர்மலா தேவியுடன் வசித்துவந்தார். சில நாள்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கோபிராஜ் உயிரிழந்த நிலையில் அவர் வசித்து வந்த வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த சாய் ராம் என்பவர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சாய் ராம் முன்னதாக அந்த வீட்டில் வசித்து வந்த வளர்மதி மற்றும் நிர்மலா தேவி ஆகியோரை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதுடன் மீண்டும் வீட்டிற்கு வந்தால் கொலை செய்து விடுவதாக ஆட்களை வைத்தும் மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த வளர்மதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கணவனை பிரிந்து மகளுடன் வாழ்ந்து வரும் தனக்கு தற்போது எந்த வித வாழ்வாதாரம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்பதாகத் தெரிவிக்கும் வளர்மதி இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி மகள் நிர்மலா தேவியுடன் இன்று (அக்.,5) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் தாய் மகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.