திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் புதூரைச் சேர்ந்தவர் ராஜ்பிரதாப் (39). இவர் கட்டுமான தொழிலுக்குத் தேவையான பொருட்கள் விற்பனை மற்றும் வாடகைக்கு விடும் தொழிலை செய்துவருகிறார். இந்நிலையில், நேற்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், "2012ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி வேலம்பாளையம், நேரு வீதியைச் சேர்ந்த ஜோதிடர் பரமேஸ்வரன் (42) என்பவர், தனது மனைவி வழி உறவினர் ஆறுமுகம் என்பவருக்கு வர்த்தக தேவைக்காக பணம் உதவி கேட்டார். பிறகு ஒரு நாள், திருப்பூர் குமாரசாமி நகரைச் சேர்ந்த திருப்பூர் மாவட்ட திமுக விவசாயிகள் பிரிவு துணை அமைப்பாளர் எஸ். ஆறுமுகத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
ஆறுமுகத்துடன் அவரது நண்பர் தனபால் என்பவரும் உடனிருந்தார். வந்தவர்கள் தங்களிடம் சந்தன கடத்தல் வீரப்பனின் பரம்பரை சொத்தான ஒரு கலைநயமிக்க பானை உள்ளது. அதை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டும். அதற்கு சில அரசு விதிமுறைகள் உள்ளன. இதற்கு அதிக பண செலவாகும் என்பதால் அந்தப் பானையை விற்பனைக்கு பேசியுள்ளோம். அந்த பானையை விற்றதும் பொருளுக்குரிய பணம் ஒரு கோடி ரூபாய் தங்கள் வங்கிக் கணக்கில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் வந்துவிடும் என ஆசை வார்த்தை காட்டினர்.
இதனை நம்பி அவர்களிடம் நான்கு தவணையில் 8.5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தேன். அதனோடு, ரேசன் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை என்னிடமிருந்து வாங்கி சென்றனர். ஆனால், தற்போதுவரை எனது வங்கிக் கணக்கில் பணம் ஏறவில்லை. ஜோதிடர் பரமேஸ்வரனிடமும், ஆறுமுகத்திடமும் பலமுறை பணத்தை திரும்ப கேட்டும் இருவரிடத்திலும் எந்த பதிலும் இல்லை.
வெளிநாட்டிலிருக்கும் ஒரு கலை பொருள் விற்பனை நிறுவனத்திடம் அப்பொருளை விற்றுவிட்டோம். வெளிநாட்டு நிறுவனத்துக்கும் தங்களுக்குமிடையே தரகு நிறுவனமாக செயல்பட்ட தனியார் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிற்கு பணம் வந்துவிட்டது. அந்த நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையை தனக்கு முன்பணமாக கொடுத்துள்ளது எனக் கூறி, சான்றிதழ் பெறுவது போன்ற புகைப்படத்தை காட்டினர். அதில் பணம் வந்து சேர்வதற்கான உத்திரவாத சான்றிதழை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியிருப்பதாக ஒரு சான்றிதழை காட்டினர். அதில், ஆறுமுகத்தின் படம் மற்றும் இருவரது கையெழுத்துகள் இருந்தன.
அந்த கையெழுத்துகள் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் மற்றும் அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு உரியது, எனவே பணம் கிடைத்துவிடும் என்றனர். ஆனால் பணம் வந்தபாடில்லை. கடந்த ஜனவரி 23ஆம் தேதி ஆறுமுகத்திடம் பணத்தை கேட்டேன். அப்போது தங்களிடமிருக்கும் அந்த பழம்பொருளான பானையின் மதிப்பு 4.5 லட்சம் கோடி ரூபாய். இந்த பணத்தை சட்டரீதியாக பெற இந்திய பிரதமர் மோடி கையெழுத்திட வேண்டும். ஆனால் அதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் பிரதமர் கையெழுத்திடுவார். அதன் பிறகு பணம் கைக்கு வந்துவிடும் என்று கூறினர்.
இதனையடுத்து அவர்கள் காட்டிய சான்றிதழ் பற்றி விசாரிக்கையில் அது போலியானது என்பது உறுதியானது. இவர்கள் மோசடிக்காரர்கள் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மோசடியில் ஈடுபட்டதாக ஆறுமுகம் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்தேன். ஆறுமுகம், தனபால், ஜோதிடர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கும்பலாக சேர்ந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
வர்த்தகத்துக்கு எனக் கூறி என்னிடம் பண மோசடியில் ஈடுபட்டதோடு, போலியான ரிசர்வ் வங்கி ஆவணங்களை காட்டி, பிரதமர் லஞ்ச பணம் கேட்பதாகக் கூறி அவரை அவமதிப்பு செய்து மோசடி செயல்களில் ஈடுபட்ட இந்த கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவரது புகாரைப் பெற்ற காவல் துணை ஆணையர் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்துக்கு புகாரை அனுப்பியுள்ளார். மேலும், கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் இரிடியம் இருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட புகாரில் கோவை போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘முகமது அலி ஜின்னாவின் நிலைப்பாட்டோடு ஒத்துப்போகும் திமுக’