திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு பல்லடத்தில் இயங்கி வரும் சங்கீதா மொபைல்ஸ் கடை பிரதான தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 15 நாள்களுக்கு முன்னர் (கடந்த16ஆம் தேதி) இரவு மொபைல் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த செல்ஃபோன்கள் திருடப்பட்டன.
இதனிடையே இச்சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தலைமை அலுவலகத்திற்கு எச்சரிக்கை தகவல் கிடைத்ததை அடுத்து, இது குறித்து கடையின் விற்பனை மேலாளர் பிரதாப்பிற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே இச்சம்பவம் குறித்து பல்லடம் குற்றப்பிரிவு காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டு கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திக்ஷா மித்தல் உத்தரவின் பேரில், பல்லடம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல் மேற்பார்வையில் பல்லடம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுஜாதா தலைமையில் உதவி ஆய்வாளர் செந்தில்பிரபு, முதல்நிலை காவலர் மதிவாணன், சேதுராமன், ராஜா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு ஆய்வாளர் சுஜாதா தலைமையில் பனப்பாளையத்தில் நடைபெற்ற சோதனையின்போது சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞர் ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
அதன்படி, அந்த இளைஞரின் பெயர் முபாரக் அலி(27). இவர் கோவை மாவட்டம் துடியலூரை சேர்ந்தவர். இவர் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 28 வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. மேலும் கடந்த 16ஆம் தேதி பல்லடம் சங்கீதா மொபைல் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து முபாரக் அலியிடமிருந்து ரூபாய் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 27 செல்ஃபோன்களை கைப்பற்றினர். பின்னர் முபாரக் அலியை நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆயிரத்து 300 கிராம் கஞ்சா பறிமுதல்: மூன்று இளைஞர்கள் அதிரடி கைது