திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார் தனது ஊரில் இருந்தவாரே சொந்த விஷயமாக திருப்பூர் மாநகர காவல் ஆணையருக்கு நேரடியாக புகார் ஒன்றை அளிக்க விரும்பியுள்ளார். இதனால் இணையத்தில் அவரின் தொலைபேசி எண்ணை தேடி எடுத்து தொடர்பு கொண்டுள்ளார். அப்போது மறுமுனையில் பேசியவர் தன்னை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் என்று தெரிவித்து வினோத்குமாரின் புகாரை கேட்டுக்கொண்டுள்ளார். பின்னர் புகார் குறித்து விசாரிக்க செல்லும் வாகனங்களின் எரிபொருள் செலவுக்காக ரூ.4 ஆயிரத்தை தனிப்பட்ட வங்கிக் கணக்கு ஒன்றில் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, வினோத்குமார் ரூ.3,500 பணத்தை அந்த வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். பணத்தை செலுத்திய பின்பு அந்த எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த வினோத்குமார் காவல் துறையில் விசாரித்துள்ளார். அதில் தான் ஏமாற்றப்பட்டிருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது.
இந்த மோசடி குறித்து வினோத் குமார் திருப்பூர் மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அந்த அலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை வைத்து விசாரனை மேற்கொண்டனர். இதில் திருப்பூர் நெசவாளர் காலனி திருமலை நகரைச் சேர்ந்த முகமது இப்ராகிம்(20) என்ற இளைஞர் தான் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இப்ராகிமை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இணையத்தில் தனது செல்ஃபோன் எண்ணை காவல் ஆணையர் எண் போல தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றி வினோத்குமார் போல் பலரையும் ஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது.