திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38). இவர் தனது மனைவி சித்ரா (35) மற்றும் இரண்டு மகள்களுடன் திருப்பூர் செல்லம் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அமிர்தலிங்கம் திருப்பூர் தென்னம் பாளையம் காய்கறி சந்தையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சித்ரா டிக்டாக்கில் அதிக ஈடுபாடு கொண்டவர் எனக் கூறப்படுகிறது. டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னர் இன்ஸ்டா ரீல்ஸ் என அதிலேயே தனது நேரத்தை அதிக அளவில் செலவழித்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட அவருக்கு வாய்ப்பும் கிடைத்துள்ளது. பின்னர் நண்பர்கள் உதவியுடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சித்ரா தனியாக சென்னையில் குடியேறியுள்ளார்.
பெரிய மகளுக்கு திருமணம் என்பதால் கடந்த வாரம் மீண்டும் அவர் திருப்பூர் திரும்பி உள்ளார். திருமணம் முடிந்து ஒருவாரம் ஆன நிலையில் மீண்டும் சென்னை செல்ல போவதாக அமிர்தலிங்கத்திடம் தெரிவித்துள்ளார். இதற்கு அமிர்தலிங்கம் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த கணவர் மனைவி அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் விட்டை வீட்டு வெளியேறிய அவர் பெரிய மகளுக்கு போன் செய்துள்ளார். அம்மாவை அடித்து விட்டேன் எனவும் அவர் என்ன செய்கிறார் பார் என்றும் கூறியுள்ளார்.
மகளும் வீட்டிற்கு சென்று பார்த்த போது சித்ரா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக திருப்பூர் மத்திய காவல் நிலையத்திற்கு தனது கணவர் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே விரைந்து சென்ற போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அமிர்தலிங்கத்தை பெருமாநல்லூரில் வைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நண்பனைக் கத்தியால் குத்திய நபர் கைது!