தாராபுரம் சர்ச் ரோடு பகுதியில் ரமணா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், இன்று (ஜன.02) காலை 5.30 மணியளவில் மூன்றாம் தளத்திலுள்ள மருத்துவரின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக கீழ் பகுதியிலிருந்த செவிலியர், மருத்துவமனை ஊழியர்களும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
தீயை கட்டுக்குள் கொண்டுவந்த வீரர்கள்:
இதையடுத்து, அரை மணி நேரம் போராடி மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தத் தீ விபத்தில் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ரமணா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தாமோதரன் (65), மருத்துவர் தேவி தாமோதரன் (60), மருத்துவர் விக்னதர்ஷன் (36) ஆகியோருக்கு லேசான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
மூச்சுத் திணறல்:
மேலும், மருத்துவர் சத்யா விக்னதர்ஷன் (34), 12 வயது சிறுமி ஆகியோருக்கு அதிகளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டின் ஹாலில் மாட்டி வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி டிவியில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: வானூரில் 12 குடிசை வீடுகள் தீயில் கருகி நாசம்!