திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே காணூர் கிராமத்தில் வாழை, கரும்பு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் உற்பத்தி செய்துவந்தனர். இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளாக சரியான மழைப்பொழிவு குறைந்ததால், விவசாயிகள் மாற்றுத் தொழிலில் கவனம் செலுத்திவருகின்றனர்.
அந்த வகையில், காணூரைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி ஆண்டு முழுவதும் வருமானம் வரும் வகையில் நாட்டுக்கோழிகளை வளர்க்க தொடங்கினார். பண்ணை முறையில் அல்லாமல் தனது தோட்டத்தில் சுதந்திரமாக நாட்டு கோழி, சேவல் உள்ளிட்டவற்றை வளர்த்து நல்ல விலைக்கு விற்பனை செய்தும் வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆறுமாதங்களுக்கு முன் இவரது தோட்டத்திலிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள ஏழு சேவல்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். எனவே தனது சேவல்களை திருட்டு கும்பலிடம் இருந்து காப்பதற்காக, அவற்றை அடைத்து வைக்கும் குடில்களை சுற்றி ரூ.50 ஆயிரம் செலவில் சிசிடிவி கேமாராக்களை அமைத்துள்ளார்.
இந்த நான்கு கண்காணிப்பு கேமராக்களையும் தனது வீட்டில் உள்ள தொலைக்காட்சியுடனும் இணைத்துவிட்டார். இதன் மூலம் கோழி திருட்டில் ஈடுபடும் நபர்களை இரவிலும் துல்லியமாக அடையாளம் காணும் வகையில் 2 மெகா பிக்சல் கேமராக்களை மாட்டியுள்ளதால் தற்போது கோழிகள் திருடு நடைபெற வாய்ப்பில்லை என்கிறார் விவசாயி.