திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள சின்னகாளிபாளையத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(39). தாயை இழந்த இவர், தந்தை துரைராஜ்(70), கணவரை இழந்த மூத்த சகோதரி செல்வி(42) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். செல்வியின் மகன் ரகுநாதன்(22) கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டதால் குடும்பமே சோகத்தில் மூழ்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை இளைய சகோதரி சாந்தியை சந்திக்க இடுவாய்க்கு சென்ற கோபாலகிருக்ஷ்ணன், சாந்தியிடம் ரூ. 30 ஆயிரத்தைக் கொடுத்ததாக தெரிகிறது.
பின்னர் வீடு திரும்பிய கோபால கிருஷ்ணனும், அவரது குடும்பத்தினரும் வெகுநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், உள்ளே சென்று பார்த்தபோது கோபாலகிருஷ்ணன் தூக்கு மாட்டியும், அவரது தந்தை விஷமருந்தியும் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
விஷமருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த செல்வியை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து வந்த மங்கலம் காவல் நிலையத்தினர் உயிரிழந்தவர்களின் உடல்களை கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.