மறைந்த முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட பொருள்களை வழங்க அதிமுகவினர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அதற்காக வாங்கப்பட்டிருந்த 4,500 வேட்டிகள், 1,700 சேலைகள், 4000 பேக்கள், 1950 சில்வர் தட்டுகள் உள்ளிட்ட பரிசுப் பொருள்களை திருப்பூரை அடுத்த தாராபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைத்திருந்ததாக அறியமுடிகிறது. இந்நிலையில், பரிசுப் பொருள்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து பிறந்த நாள் விழாவை உடனடியாக நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டது.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த காரணத்தால் இந்தப் பொருள்களை அதிமுகவினர் வாக்காளர்களுக்கு கொடுக்கக் கூடாது எனத் திமுகவினர் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
அதிமுகவினர் வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வாக்காளர்களுக்கு கொடுக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறி தனியார் பொறியியல் கல்லூரியை முற்றுகையிட்டு அதிமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி ஜெயராமன் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினருடன் பேச்சுவார்த்தையில் இறங்கினர்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வகுப்பறைகளுக்குள் வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலை உள்ளிட்ட பொருள்களை ஆய்வு செய்த தேர்தல் அலுவலர்கள், அவற்றை வைத்து பூட்டி சீல் வைத்தனர். திமுகவினரின் இந்தத் திடீர் போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : ஸ்டாலினை எதிர்த்துக் களம்காணும் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்?