திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகளின்போது மின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டதால், மின்தடை ஏற்பட்டு கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டதாகவும், அடுத்தடுத்து இரண்டு நோயாளிகள் உயிரிழந்ததாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்துப் பேசிய மருத்துவக் கல்லூரி இயக்குநர் வள்ளி, "கட்டுமானப் பணியின்போது மின்தடை ஏற்பட்டது உண்மை. ஆனால், ஆக்ஸிஜன் செல்வதில் எந்த இடையூறும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.
கட்டுமானப்பணியின்போது ஒயர்கள் துண்டிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் விஜய்கார்த்திகேயன், மருத்து மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களிடம் விளக்கங்களை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட இடையூறு காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளது.
ஆனால், நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் அளவு செல்வதில் பற்றாக்குறை ஏற்படாதவாறு மருத்துவர்கள் செயல்பட்டனர். மேலும், நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்தில் முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கவனக்குறைவாக செயல்பட்டதாக ஒப்பந்ததாரர், பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணையின் முடிவில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கட்டுமானப் பணி நடைபெறும் போது நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தற்காலிகமாக மாற்று இடத்தில் சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் சுகாதாரத்துறையிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: மின் தடை... ஆக்ஸிஜன் பற்றாக்குறை - திருப்பூரில் மூவர் உயிரிழப்பு