திருப்பூர்: வருகின்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் தீவிரப் பரப்புரைகளைத் தொடங்கியுள்ளன. அனைத்து கட்சிகளையும் முந்திக் கொண்டு, 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது பரப்புரையைத் தொடங்கினார்.
5ஆம் கட்ட பரப்புரையை ஜன.,10ல் கோவையில் தொடங்கிய அவர், நேற்று(ஜனவரி 11) திருப்பூரில் சிடிசி கார்னர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், 'திருப்பூர் வரும் வழியில் நொய்யல் ஆற்றைப் பார்த்தேன். மனம் நொந்து போனேன். இவற்றை எல்லாம் நாம் சீரமைக்க வேண்டும். இந்த ஊர் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும். அதை மக்கள் நீதி மய்யம் செய்து காட்டும். எங்கு பார்த்தாலும், குப்பைக்கூளமாக உள்ளது. இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதோடு சரி. தொழிலாளியிடம் வசூல் செய்த 2 விழுக்காடு சேர்த்தால் 20 கோடி ஆகியிருக்கும். இன்னும் மருத்துவமனை வரவில்லை.
இளைஞர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவது எங்கள் திட்டம். வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடத்தினோம். இன்றைக்கு கொள்ளையனே வெளியேறு போராட்டத்தை நாம் நடத்துவோம். இன்னும் மூன்று மாதங்களில் இங்கிருப்பவர்கள் எடுக்கப்போகும் முடிவு தான் மாற்றத்துக்கான தொடக்கம். தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்வோம்' என்றார்.
முன்னதாக அவிநாசி பகுதியில், 'சட்டப்பேரவைத் தேர்தல், கட்சிகளுக்கு இடையே நடக்கு போர் அல்ல. நேர்மைக்கும், ஊழலுக்கும் இடையே நடக்கும் போர். மக்களின் வாக்கு நேர்மையின் பக்கமே இருக்க வேண்டும். முதலை விழுங்கிய பாலகனை சுந்தரர் பாடல் பாடி, மீட்டெடுத்த தலம் அவிநாசி. தமிழ்நாட்டை பண முதலைகளிடம் இருந்து மீட்க மக்கள் உதவ வேண்டும். புதிய வாக்காளர்கள் கரைபடியாதவர்கள். சாதியைப் பார்த்து வாக்களிக்காமல், சாதிப்பவர்களுக்கு வாக்களியுங்கள்' என கமல்ஹாசன் பேசினார்
இதையும் படிங்க : அழுகிய பயிர்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்!