தமிழ்நாட்டில் உங்களுக்கு உணவில் என்ன ஃபேவரைட் என்று யாரை நிறுத்திக் கேட்டாலும், சட்டென யோசிக்காமல் ‘பிரியாணி’ என்றே பெரும்பாலும் பதில் வரும். பிரியாணியின் சொந்தக்காரர்களான முகலாயர்களிடமிருந்து நாம் விடுதலை அடைந்திருந்தாலும்கூட, அவர்களின் பிரியாணியோ நம்மை இன்னும் விடுதலை செய்வதாக இல்லை.
பிரியாணி போதை
அது மேலும் மேலும் நம்மை சிறைப்பிடித்துக்கொண்டு, மது, மாது போதைபோல் சுவை என்ற பாச கயிற்றில் கட்டிவைத்துள்ளது. பெண்களின் கூந்தலுக்கு மட்டுமல்ல, பிரியாணிக்கும் ஒரு மணம் உண்டு. எங்கு சென்றாலும் மணத்தால் கட்டியிழுக்கும் வல்லமை பிரியாணிக்கு மட்டுமே உண்டு என்று சொன்னால் எவராலும் மறுக்க முடியாது, ஏனென்றால் நமது நாக்கு பிரியாணியின் சுவைக்கு தீவிர விசிறி.
என்னதான் பிரியாணிக்கு நாம் தீவிர விசிறியாக இருந்தாலும், 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழர்கள் ஊன் சோறு என்ற பிரியாணி போன்ற ஒரு உணவை சமைத்து சாப்பிட்டதற்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் குவிந்துகிடக்கின்றன. அதனால், பிரியாணிக்கும் முன்னோடி நாம்தான் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.
இலக்கிய பிரியாணி
சங்க கால பதிற்றுப்பத்துப் பாடலில் ”சோறு வேறு என்னா ஊன்துவை அடிசில்ஓடாப் பீடர் உள்வழி இறுத்து” என்ற வரிகளிலும், ”புலவு நாற்றத்த பைந்தடிபூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவைகறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது பிறிது தொழில் அறியா ஆகலின்” என்ற கபிலரின் வரிகளுமே அதற்குச் சான்று!
ஊன் என்றால் இறைச்சி, அதன் நாற்றம் இல்லாமலிருப்பதற்காகச் சோறில் தாளித்து எடுத்துச் சமைத்தார்கள் என இவ்வரிகள் உணர்த்துகின்றன. இதனையே பிற்காலத்தில் முகலாயர்கள் பிரியாணி என்ற பெயரில் சமைத்தனர். வரலாறு முக்கியம் அமைச்சரே!அப்பெயர்பெற்ற பிரியாணிக்கு, அதன் உரிமையாளர்கள் பாதுகாப்பு கேட்பது காலத்தின் கட்டாயம்.
ஆம், திருப்பூரில் பிரியாணி அண்டாக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி அப்பகுதி பிரியாணி உரிமையாளர்கள் ஒன்றுசேர்ந்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம்தான் விசித்திரமாக உள்ளது. நாளை பாஜக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான பேரணி நடைபெறவுள்ளதால், அவர்களிடமிருந்து பிரியாணி அண்டாக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதே.
என்ன நடந்தது... எதற்காகப் பாதுகாப்பு?
அப்படியே, மூன்று ஆண்டுகளுக்குப் (2016) பின்னால் போனால் கோவையில நடந்த ருசிகர சம்பவம்தான் பிரியாணிக்கு ஏன் பாதுகாப்பு கேட்கப்படுகிறது என்பது விளங்கும். கோவையில் இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் என்பவர் கொல்லப்பட்டார். அவரது உடலை எடுத்துச் செல்லும்போது ஆங்காங்கே சில கலவரங்கள் ஏற்பட்டன.
அந்தக் கலவரத்தைப் பயன்படுத்தி, சாலையோர பிரியாணி கடைகளில் தயார்செய்து வைத்திருந்த பிரியாணியை அண்டாவுடன் சிலர் திருடிச் சென்றனர். அந்தச் சம்பவம் பிரியாணி உரிமையாளர்களின் மனதில் ஆறா வடுவாக மாறி, இப்போது பாஜக பேரணியிடமிருந்து பிரியாணியைக் காக்க காவல் துறையினரிடம் பாதுகாப்பு கேற்கும் நிலைக்கு அவர்களைத் தள்ளியது சோகத்தின் உச்சம்.
மறுபடியும் சொல்றேன் மை பிரியாணி அண்டா!
உடல் மண்ணுக்கு... உயிர் பிரியாணிக்கு என்று அடிக்கடி வசனம் பேசும் 90ஸ் கிட்ஸ் பிரியாணியைக் காப்பாற்ற நாளை ஒவ்வொரு பிரியாணி அண்டாவுக்கும் அருகில் (சந்திரமுகி படத்துல ரஜினிட்ட இருந்து தன்னோட மனைவிய வடிவேலு காப்பாத்துற மாறி) பாதுகாவலனாக நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..
இதையும் படிங்க: மதுரை - டு - சிங்கப்பூர்: பறக்கத் தயாராகும் ஜில் ஜில் ஜிகர்தண்டா... #Exclusive