மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் தடைசெய்யப்பட்டன. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.
அந்த வகையில் திருப்பூரில் தங்கியுள்ள ஒடிசா, பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். அதனால், அவர்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலமாக உணவு விநியோகிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே வெவ்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களை, தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் வகையில், மத்திய அரசு சிறப்பு ரயில் சேவையைத் தொடங்கியது. அதன்படி திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் தங்கி வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரத்து 140 பேர் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் கட்டமாக இன்று சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதன்படி இன்று மதியம் திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து பீகார் மாநிலத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதில் சைனிக் பள்ளி மாணவர்கள் 46 பேர் உட்பட ஆயிரத்து 140 பேர் தங்களது சொந்த மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்களை ரயில் நிலையத்தின் பிரதான நுழைவுவாயிலில் தகுந்த இடைவெளியைப் பின்பற்றும் விதமாக நிற்கவைத்து சுகாதாரத்துறையினர், அவர்களுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு ரயில்களில் அமர வைக்கப்பட்டு, அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக மீதமுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து அஜித் தோவல் ஆலோசனை