திருப்பூர் ஆலங்காடு பூசாரி தோட்டம் பகுதியில் தர்மராஜ் என்பவர் பழைய இரும்பு பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். தீபாவளியை முன்னிட்டு நேற்றும் இன்றும் கடைக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், இன்று இரவு 7 மணி அளவில் அங்கிருந்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். இதற்கிடையே, அருகில் உள்ள கார் மெக்கானிக் ஷாப்பிற்கும் தீ பரவியது. இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டு வாகனங்கள் தீயில் எரிந்தது. அதனைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு, தெற்கு என இரண்டு தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீபாவளி பண்டிகை என்பதால் அருகில் இருந்தவர்கள் பட்டாசு வெடிக்கும்போது, தீப்பொறி பட்டு தீ பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.