நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்த 2020-2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ரூ.500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது.
இது குறித்து அத்திக்கடவு-அவினாசி போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சம்பத் தெரிவித்தபோது, ’அத்திக்கடவு - அவினாசி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடந்த தொடர் போராட்டத்தை அடுத்து, தமிழ்நாடு அரசு கடந்த காலங்களில் ரூ.1,652 கோடியில் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும், படிப்படியாக அதற்கு நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 2019-2020ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், இத்திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோன்று முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றும் வருகிறது.
இந்நிலையில், தற்போது அத்திட்டத்திற்காக 2ஆம் கட்டமாக இந்த நிதி ஆண்டில் 500 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி இருப்பது வரவேற்புக்குரியது. இத்திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இத்திட்டம் முழுமை பெற்றால், கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள வறட்சி மிக்க அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கேயம், ஊத்துக்குளி, நம்பியூர் மற்றும் புளியம்பட்டி பகுதிகளில் உள்ள 31 ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றியக் குளங்கள் மற்றும் ஏனைய 538 நீர் நிலைகளில் நிரம்பி, இப்பகுதியை ஓட்டிய 70 குளங்களும் நீர் நிறைந்து காட்சியளிக்கும். பாலைவனமாக காட்சியளிக்கும் இப்பகுதிகள், இத்திட்டத்தின் மூலம் பசுமையாக காட்சியளிப்பதோடு, 1.30 லட்சம் ஏக்கர் வேளாண் நிலங்களில் நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என்றார்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்ததுமாறு கோரிக்கை விடுத்த போராட்டக் குழுவினர், கடந்த மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கடைக்கு தீ வைத்த அடையாளம் தெரியாத நபர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு!