ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர் செல்ல ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திருந்தனர். இந்நிலையில், அலுவலர்கள் இன்று இரண்டாம் கட்டமாக ஆயிரத்து 464 பேர்களை ரயில் மூலம் சொந்த மாநிலமான பீகாருக்கு அனுப்பிவைத்தனர்.
முன்னதாக வட மாநிலத் தொழிலாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஆய்வு செய்து அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தார். அவர்களுக்கு தண்ணீர் பாட்டில், உணவு உள்ளிட்டவைகளை மாவட்ட நிர்வாகத்தினர் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், “திருப்பூரிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல விருப்பப்படும் வெளிமாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை பேருந்தின் மூலம் 700 பேர் ஆன்லைன் பாஸ் பெற்று சென்றுள்ளனர். வெளி மாநிலம் செல்ல சிறப்பு ரயிலுக்காக 10 ஆயிரத்து 400 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஏற்கனவே ஒரு சிறப்பு ரயில் பீகாருக்குச் சென்றதுபோல இன்றும் ஒரு ரயில் சென்றது. இனி வரும் நாள்களில் உத்தரப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
பெரும்பாலான தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கியிருந்து பணி செய்ய விரும்புகின்றனர். ஊருக்குச் செல்ல விண்ணப்பிக்கப்பட்டிருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் மட்டும் ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பேருந்து மூலம் சொந்த ஊர் சென்ற அசாம் தொழிலாளர்கள்!