திருப்பத்தூர்: ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீரை விவசாய நிலங்களில் விடுவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தப்புகாரின் பேரில், அங்கு ஆய்வு நடத்திய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், உரிய முறையில் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் தொடர்ந்து தோல் தொழிற்சாலை மற்றும் வஜ்ரம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுகளை நேரடியாக விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகளில் தொழிற்சாலை நிர்வாகத்தினர் விடுவதாக, விவசாய சங்கத்தினர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் உதவிப்பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான அலுவலர்கள், ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சியின் பந்தேரிபல்லி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இன்று (செப்.20) ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் கழிவுப்பொருட்களை உடனடியாக 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்தாவிட்டால், தொழிற்சாலை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், பாலாற்றில் கழிவுநீர் கலப்பதாக விவசாயிகள் அளித்தப் புகாரின் பேரில், பாலாற்றில் உள்ள நீரை ஆய்வுக்கு எடுத்துச்சென்று முறையாக ஆய்வு செய்ய உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தோல் துறையின் திறன் மேம்பாட்டுக்கான ஸ்கேல் செயலி வெளியீடு...!