திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரம் மற்றும் ஆலங்காயம் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்து முன்னணி, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பாக ஆங்காங்கே சுமார் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு மூன்று நாள்கள் விழா கொண்டாடப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவலைக் கட்டுபடுத்த விநாயகர் சிலைகள் வைக்க அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை வெளியே கொண்டு சென்று கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்து முன்னணி நிர்வாகிகள், இந்து இயக்கத்தினர், பொதுமக்கள் சார்பில் விநாயகரை வைத்து வழிபடும் விழா குழுவினர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், காவல் துணை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
அதில் அரசாணைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு காவல் துணை கண்காணிப்பாளர் பேசியபோது, அதனை ஆமோதித்து பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், அரசின் இந்த தடை ஆணையை பின்பற்ற முடியாது என கண்டன கோஷங்களை எழுப்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் பேசிய அனைவரும் மற்ற மத விழாக்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மத நம்பிக்கைக்கு மதிப்பளித்து சில தளர்வுகளை வழங்கியதை போலவே, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கும் தளர்வுகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: டியூசன் வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் போக்சோவில் கைது