திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்றுவரை 104 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் மட்டும் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 45 பேர் சிகிச்சைப் பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 59 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொத்தூர், வெலதிக்காமணி, பெண்டா உள்ளிட்ட மூன்று தமிழ்நாடு, ஆந்திரா மாநில எல்லைகளிலும், மாதநூர், வெலக்கல்நத்தம், தர்மபுரி என மூன்று மாவட்ட எல்லைகள் உள்பட ஆறு சோதனைச் சாவடிகள் அமைக்கபட்டு மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல் துறை, வருவாய்த் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இ-பாஸ் இல்லாமல் மாவட்ட எல்லைக்குள் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. மேலும் போலி இ-பாஸ் மூலம் மாவட்ட எல்லைக்குள் வருபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் கண்டிப்பாக எச்சரித்துள்ளது.
மண்டல வாரியாக சென்றுகொண்டிருந்த வாகனங்கள், பேருந்துகள் நிறுத்தப்பட்டு மக்களின் வசதிக்காக மாவட்டத்திற்குள் இயக்கப்பட்டுவருகின்றன. உள் மாவட்ட எல்லைகளுக்குள் செல்லும் பேருந்துகளில் ஒரு பேருந்திற்கு 22 பேர் மட்டும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.

பேருந்தில் செல்லும் பயணிகளின் வெப்பத்தன்மையைக் கண்டறிந்து கிருமிநாசினி மூலம் கைகழுவிய பின்னரே பேருந்துகளில் ஏற அனுமதிக்கின்றனர்.
இதையும் படிங்க... சோதனைச்சாவடியில் தடுத்து திருப்பி அனுப்பப்படும் வெளியூர் வாகனங்கள்