ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று வந்த திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி, அகரம்சேரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய அவர், “மத்திய பாஜக ஆட்சியும், அவர்களின் பினாமிகளான தமிழகத்தை ஆளும் அதிமுக ஆட்சியும் மக்களுக்குள் பிரிவினையை தூண்டி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு திட்டத்தையும் அதிமுக அரசு பூர்த்தி செய்யவில்லை. இந்த ஆட்சியில் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பெண் காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைதான் இருக்கிறது. தமிழகத்தையும் தமிழ் மொழியையும் மீட்டெடுக்க திமுக கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
பின்னர், அகரம்சேரி பகுதியில் பாய் நெசவு தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கனிமொழி கேட்டறிந்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, நகைக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பலவற்றை அறிவித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளாக செய்யாத பல திட்டங்களை, தேர்தலுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கடைசி நேரத்தில் அறிவித்த எதையும் நிறைவேற்ற முடியாது என முதலமைச்சருக்கே தெரியும். அது தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட ஒரு கண்துடைப்பு” என்று குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: கொடுத்தார்கள்... அதனால் வென்றார்கள்- ராமதாஸ் ட்வீட்