ஊரடங்கு உத்தரவை மீறி சவுதி அரேபியாவிலிருந்து இரண்டு கண்டெய்னர்கள் சென்னை கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, சென்னையிலிருந்து இன்று அதிகாலை இரண்டு லாரிகள் மூலம் சுமார் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பிலான தோல்களை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு 14 தொழிலாளர்களை வைத்து தோல்களை இறக்குமதி செய்யப்பட்டுவந்தது. இது குறித்து நகராட்சி அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ், வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி ஆகியோர் அந்தத் தொழிற்சாலைக்குள் நேரடியாக ஆய்வு நடத்தினர்.
அப்போது கண்டெய்னர் லாரியில் அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு தோல்கள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இரண்டு கண்டெய்னர் லாரிகளுக்கும் அந்தத் தோல் பொருள்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
பின்னர் அந்தக் கண்டெய்னர் லாரிகள், தனியார் தொழிற்சாலைக்குச் சீல்வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் இரண்டு ஓட்டுநர்கள், இறக்குமதி ஆள்கள் 12 பேர் உள்பட 16 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும், அந்த இரண்டு ஓட்டுநர்கள் சென்னை வழியாக வந்ததால் அவர்களைத் தனிமைப்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சாலை விபத்தில் சிக்கியவருக்கு கரோனா தொற்று உறுதி