திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஏகே மோட்டூர் பகுதி அண்ணா நகரை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் சஞ்சனா (2), குரிசிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் இவரது மகன் கிஷாந்த்(2). இவர்கள் இருவரும் ஏகே மோட்டூர் பகுதியில் உள்ள பாம்பாறில் கலக்கும் ஓடை அருகே விளையாட சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் நீரோடையில் அடித்துச் செல்லப்பட்டனர் . இது குறித்து தகவலறிந்த அக்கம், பக்கத்தினர் திருப்பத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணிநேரம் போராடி குழந்தைகளின் உடல்களை மீட்டனர்.
அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர், குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, பின்பு உயிரிழந்த 2 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
குழந்தைகள் இரண்டு பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்