திருப்பத்தூர்: 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற 28ஆம் தேதி சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள நிலையில் கோயம்புத்தூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களைக் கடந்து 44ஆவது செஸ் ஒலிம்பியாட் ஜோதி நேற்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாஹா சக துறை சார்ந்த அலுவலர்களுடன் ஜோதியை வரவேற்று பெற்றுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து இன்று (ஜூலை 26) திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கறுப்பு வெள்ளை பலூன்கள் பறக்க விடப்பட்டது.
மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இருந்து தூய நெஞ்சக்கல்லூரி வரை அனைவரும் ஜோதியை பேரணியாக எடுத்துச்சென்று தூய நெஞ்சக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் உட்பட அனைவரும் ஜோதியை எடுத்துக்கொண்டு மைதானத்தைச்சுற்றி வந்தனர். இதனைத்தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் ஜோதியை 11 சுற்றுகள் ஓடி, அதன் பின்பு தூய நெஞ்சக்கல்லூரி கலையரங்க மேடையில் வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்ற பின்பு தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு செஸ் போட்டி நடைபெற்றது. அப்போது திட்ட இயக்குநர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேரடி உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர் முத்தையன், அனைத்து கட்சிப் பிரமுகர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:கருப்பட்டியை பயன்படுத்தி ஆவினில் சுவையான இனிப்பு