தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்புப் பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கவனித்து வருகின்றன. இதில் மாவட்டக் காவல் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலரும் கரோனாவை ஒழிக்க பாடுபட்டு வருகின்றனர். இச்சூழலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் உரையாடினோம். அந்த உரையாடல் பின்வருமாறு:
கேள்வி: திருப்பத்தூரில், கரோனா தடுப்புப் பணியில் மாவட்ட சுகாதாரத் துறையின் பங்களிப்பு என்ன?
பதில்: சுகாதாரத் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெரிய அளவில் முகாம்கள் நடத்தினர். அதில், கரோனா வைரஸ் எப்படி பரவுகிறது, அதிலிருந்து எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.
கேள்வி: இதில் மாவட்டக் காவல் துறையினர் பங்களிப்பு என்ன?
பதில்: கரோனா பரவலைத் தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இதுவரையில் 7,200 வழக்குகள் பதிவுசெய்து இருக்கின்றோம். 7,000 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து இருக்கிறோம். எங்களால் இயன்ற அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டிருக்கிறோம். இனியும் மேற்கொள்வோம்.
கேள்வி: திருநங்கைகள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் ஆகியோரை கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அழைப்பு விடுவித்துள்ளீர்களே?
பதில்: கரோனாவை பொறுத்தவரையில் அரசு அலுவலர்களோ, அரசோ எதிர்த்து போராடக்கூடிய சூழல் இங்கு இல்லை. எனவே பொதுமக்கள் ஓர் சமூகமாக தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நோயின் தீவிரம் அதிகமாக உள்ளது.
இதனை உணர்ந்து 2,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து பதிவு செய்திருக்கிறார்கள். ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் வீரர்களும் திருநங்கைகளும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட ஆர்வமாக இருந்ததால், அவர்களையும் இணைத்துக் கொண்டோம்.
கேள்வி: இப்பணியில் காவல் துறையினர் ஒவ்வொருவரின் பங்களிப்பு குறித்து சில வார்த்தைகள்...
பதில்: காவலர்களைப் பொறுத்தவரை இப்பணி சவாலான ஒன்று. ஆகையால் மனத்திடத்துடனும், உறுதியுடனும் எதிர்கொண்டால் சமாளிக்க முடியும். அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து காவல் நிலையங்களையும், காவலர் குடியிருப்புகளையும் தினமும் இரண்டு முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்கிறோம்.
காவல் துறையினர் எட்டு மணி நேரத்திற்கு மேலாகக் களத்தில் இருப்பதால், இரண்டு முகக்கவசம், கிருமிநாசினி போன்ற தற்காப்பு உபகரணங்கள் அளிக்கின்றோம். அனைத்துப் போக்குவரத்தையும் கண்காணிக்க வேண்டும். வெளிமாநில எல்லைகளில் வாகனங்களைச் சோதனை செய்ய வேண்டும். பொதுமக்களுக்குத் தேவையான மருந்து பொருள்கள் அவரவர் வீட்டிற்குச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு காவல் துறையினரின் பங்களிப்பு மிக முக்கியம். இதை உணர்ந்து அவர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி: நீங்கள் ஒரு மருத்துவர் என்பதால் உங்கள் பார்வையில் கரோனா வைரஸ் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: நான் ஒரு பயிற்சி பெற்ற மருத்துவர் என்பதால், அது எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இதனால் கரோனாவை கட்டுப்படுத்த மருத்துவர்கள், சுகாதாரத் துறையினரியின் தேவையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, அவர்களுக்குத் தேவையானவற்றை செய்ய உதவியாக இருக்கிறது. மருத்துவர்கள், செவிலியருக்கு இதுகுறித்து பிரச்னை வராமல் தடுக்க முடிகிறது. ஒரு மருத்துவராக கரோனா தொற்றைப் பரவமால் தடுக்க நடவடிக்கையும் எடுக்கின்றேன்.
கேள்வி: இதனால் மாவட்டத்தில் தனித்துவமான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?
பதில்: தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க இ-மெயில் மூலம் அவர்கள் வீட்டில் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 2,000 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களை கூகுள் மேப் மூலம் கண்காணித்து வருகின்றோம். அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் மாவட்டக் கண்காணிப்பு அறையிலிருந்து கண்காணித்து, அவர்களின் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து வெளியே செல்வதைத் தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
மாவட்டத்தில் உள்ள 770 கிராமங்களில் 5 முதல் 10 காவலர்கள் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. அவர்களும், அவர்கள் கண்காணிக்கும் கிராம மக்களும் வாட்ஸ்அப் குழு ஒன்றில் இணைக்கப்படுகின்றனர். இந்தக் குழுவுக்கு மாவட்டக் காவல் துறையினரிடம் இருந்து அறிவிப்புகள் அனுப்பப்பட்டு, பொதுமக்களுக்கு அது சென்றுசேர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்படிச் செய்வதன் மூலம் இந்தத் தகவல் குறைந்தது ஒரு நாளைக்கு சாதாரணமாக 6 லட்சம் பேருக்கு சென்றடைகிறது. இதனால் தேவையற்ற வதந்திகள் தடுக்கப்படுகின்றன.
கேள்வி: தனிப்பட்ட முறையில் உங்களின் குடும்ப ஒத்துழைப்பு குறித்து...
பதில்: குடும்ப ஒத்துழைப்பு நன்றாகவே உள்ளது. என் மனைவியும் ஊடகத்துறையில் தான் இருந்தார். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் பணியிலிருந்து நின்றுவிட்டார். ஒவ்வொரு முறையும் நான் வேலைக்குச் சென்று வீட்டிற்கு வரும்போது சில கட்டுப்பாடுகள் இருக்கின்ன. அதை நான் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.
வீட்டில் உள்ள எனது 2 வயது குழந்தையைத் தொடுவதற்குக் கூட யோசனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இது மனதிற்கு கவலையளிக்கக் கூடியதாகவே இருக்கிறது. இருந்தபோதிலும், அரசு ஊழியனாக இருப்பதால், கரோனாவை எதிர்க்கொள்ள, இவற்றையெல்லாம் தவிர்க்க முடியவில்லை. என் நிலையைப் புரிந்துகொண்டு வீட்டிலிருப்பவர்களும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.
கேள்வி: அன்றாடக் கூலிகள் ஊரடங்கால் வறுமையில் உள்ளனர். அது குறித்த உங்கள் பார்வை என்ன?
பதில்: அவர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய, அன்றாடம் மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உணவுக்கு வழியின்றி இருப்பவர்களுக்கு, அரசு மூலம் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் எவருக்கும் உணவு இல்லை என்ற நிலை ஏற்படவில்லை. ஒருவேளை அப்படியிருந்தால் மாவட்ட உதவி எண்கள் உள்ளன. அவற்றை அழைத்தால் உடனடியாக அவர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். இப்பணியைச் செய்ய அதிகளவில் தன்னார்வலர்கள் முன்வருகின்றனர். அவர்களுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கிறது.
கேள்வி: கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி மாணவர்களிடையே ஓவியப் போட்டி ஏற்படுத்தியது குறித்து...
பதில்: மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவும், பொதுமக்களுக்கு காவல் துறையினர் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் ஓவியப் போட்டிகள் நடத்தினோம். அதில் ஓரிரு நாளில் 600 பேர் இணையதளம் மூலம் தங்களின் ஓவியத்தை அனுப்பி வைத்தனர்.
இதேபோல கரோனா குறித்து இணையதளத்தில் மாணவர்களிடையே 25 கேள்விகளை மாவட்ட நிர்வாத்தினருடன் சேர்ந்து முன்வைத்தோம். அதிலும் 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றேனர். 144 தடை உத்தரவு முடிந்த பின்னர் இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் துறையினர் சார்பில் சிறப்புப் பரிசுகள் அளிக்கப்படும்.