திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இன்று (ஆக.22) விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து விழா கொண்டாடுவதையும், ஊர்வலமாக சிலைகளை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவில் சிலைகள் வைத்து கொண்டாட அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், திருப்பத்தூர் நகரில் உள்ள கௌதம்பேட்டை, பெரியார் நகர், உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி ஐந்து விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் பேபிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தடையை மீறி வைக்கப்பட்டிருந்த ஐந்து சிலைகளையும் கைப்பற்றி திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் வீட்டில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு!