வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அம்முண்டி என்ற இடத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (ஏப்.9) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், 'அதிமுக ஆட்சியின் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு சிறை: இதுகுறித்து முறையான விசாரணை தொடங்க உள்ளது. இந்நிலையில் காட்பாடி அருகே உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. அந்த முறைகேடுகளை முறையாக விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பப்படுவார்கள்' என ஆவேசமாகக் கூறினார். எனவே, தற்போதுள்ள அதிகாரிகள் உஷாராக பணியாற்ற வேண்டுமெனவும் எச்சரித்தார்.
பின்னர், வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே மேல் மாந்தாகல், குகைநல்லூர் ஆகிய இடங்களில் நியாயவிலைக் கடைகளை, மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். பின்னர் வேளாண்மை உள்ளிட்டப் பல்வேறு துறைகளின் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ரூ.18 கோடியில் தடுப்பணை: பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், 'சேர்க்காடு பகுதியில் இந்த ஆண்டு அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்படும். பொதுமக்களுக்கு சேர்க்காடு, பொன்னை ஆகியப் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் ரூ.18 கோடியில் மிகப்பெரிய தடுப்பணை கட்டப்படும்.
மேலும், பொதுமக்களின் நலன் கருதி 100 படுக்கைகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனை பொன்னைப் பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணி விரைவில் தொடங்க உள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மகி மண்டலம் பகுதியில் தொழிற்பேட்டை இந்தாண்டு கொண்டு வரப்படும்' என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணையின் சூப்பர்வைசர் கமிட்டிக்கு கூடுதல் அதிகாரம்...?