திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வன்னிய புதூர் பகுதியைச் சேர்ந்தவர், நடராஜன்.
இவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 40 ஆண்டு காலமாக ஆனந்தன் என்பவர் குடும்பத்தினருடன் தங்கி கூலி விவசாயி ஆகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தொடர்ந்து விவசாய நிலத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் குடித்துவிட்டு மதுபான பாட்டில்களை நிலத்திலேயே உடைத்தெறிந்து விட்டு சென்று வந்துள்ளனர். இதனால் விவசாயப் பணி மேற்கொள்ளும் பொழுது மிகவும் சிரமமாக உள்ளதாக பலமுறை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று 5 பேர் கொண்ட கும்பல் குடித்துக்கொண்டு இருந்ததைப் பார்த்த ஆனந்தன் அதை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் ஆனந்தன் மற்றும் அவரது மனைவி முனியம்மாள் இருவரையும் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
உதவ வந்த உறவினர்கள் மீதும் தாக்குதல்
இதனால் மண்டை உடைந்து நிகழ்விடத்திலேயே கணவன், மனைவி இருவரும் மயங்கி விழுந்தனர்.
அருகில் விவசாய நிலத்தில் இருந்த உறவினர்களான அன்பு, ரமேஷ் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் அவர்களைக் காப்பாற்ற முயன்ற போது அவர்களையும் குடிபோதையில் இருந்த கும்பல் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
படுகாயம் அடைந்த 5 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து ஆனந்தன் கொடுத்தப்புகாரின்பேரில் வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கருணாநிதி போட்டோ மாட்டுவீங்க... மோடி போட்டோ வைக்க மாட்டீங்களா...?வீடியோ வைரல்