சீனாவில் தொடங்கி தற்போது உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் வைரஸான கரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
கரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்ற நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் யாரும் கரோனா தொற்றின் தீவிரம் அறியாமல் வெளியே சுற்றி வருகின்றனர்.
இதை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடத்தி அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனையடுத்து இன்று (ஏப்.9) திருப்பத்தூர் நகரில் புதுப்பேட்டை சாலையில் திருப்பத்தூர் மாவட்ட ஸ்டிக்கர் தொழிலாளிகள் சங்கம் சார்பில் கரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்துள்ளனர். இந்த ஓவியம் அவ்வழியாக செல்லும் காண்போரை வெகுவாக கவர்ந்து உள்ளது.