திருப்பத்தூர்: அண்ணாமலை வணிக வளாகத்தில் நகராட்சிக்கு உட்பட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. இதில், சுமி ஸ்டுடியோ, சங்கமம் டிஜிட்டல், மீனா ஸ்டூடியோ, கலை காயில் கட்டும் கடை உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று (டிசம்பர் 19) நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரிக்கையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த நபரை திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் டோல்கேட் தர்காநகர் பகுதியைச் சேர்ந்த பர்கத் (20) என்பதும், அவர் அண்ணாமலை வணிகவளாகத்தில் உள்ள நகராட்சிக்கு உட்பட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கடைகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: பறந்த செருப்புகள்: கரூரில் அதிமுக - திமுக மோதல்!