திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த துத்திபட்டு பகுதியை சேர்ந்தவர் ஷாபானா (44). கூலி தொழிலாளியான இவருக்கு வரி ஏய்ப்பு குறித்த கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், தாங்கள் ( New Life International Trading Company) என்ற நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதற்கு வரி செலுத்துமாறும், இல்லையென்றால் தினமும் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் செய்வதறியாது திகைத்த ஷாபனா, இது குறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். பின் ஷாபானாவின் உறவினர்கள் உமராபாத் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து ஷாபானாவின் உறவினர் ஜபர் கூறுகையில், ஷாபானா கூலி வேளை செய்து வருவதாகவும், கடந்த ஆண்டு துத்திபட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, அதற்கு அரசாங்க சலுகைகள் பெற்று தருவதாக கூறி பான் கார்ட், ஆதார் கார்ட், வங்கி புத்தக நகல் போன்ற ஆவணங்களை சிலர் வாங்கி சென்றுள்ளனர்.
அவர்கள் தான் ஷாபானாவின் ஆவணங்களை பயன்படுத்தி இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். காலணி தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வரும் பெண்ணுக்கு வரி ஏய்ப்பு கடிதம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நாகரிக வளர்ச்சியில் தமிழர்கள் மறந்துபோன மாவலி; தயாரிப்பது எப்படி?