திருப்பத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தேவா என்பவர் தனது டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்னையில் கோழி இறைச்சிகளை இறக்கிவிட்டு காலி கூண்டுகளுடன் கிருஷ்ணகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதில் சாலையோரம் உள்ள தடுப்புகள் மீது பயங்கர சத்தத்துடன் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டாட்டா ஏஸ் வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநர் தேவா சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதனிடையே விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடிவந்த புதுமனை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கு சென்ற ஆம்பூர் நகர காவல்துறையினர் போக்குவரத்தைச் சீர் செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.