திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை ஊராட்சி நன்னேரி பகுதியில் வசிக்கும் அருந்ததியர் இன மக்களை ஒடுக்க நினைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்ப் புலிகள் மாவட்டச்செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஊர்ப் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், “சுமார் 35 ஆண்டுகளாக பத்துக்கும் மேற்பட்ட அருந்ததியர் இன குடும்பங்கள் வெள்ளக்குட்டை ஊராட்சி நன்னேரி கிராமத்தில் வசிக்கிறோம். எங்களுக்கு இது நாள் வரை அடிப்படை வசதிகளான மின்சார வசதி, குடிநீர் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஊராட்சி மன்றத்தலைவரிடம் தமிழ்ப்புலிகள் அமைப்பின் சார்பாக முறையிட்டோம். அவர் உடனடியாக ராமன் மகன் முத்து என்பவருடைய இடத்திற்கு முன்பு ஒரு நீர் குழாயை அமைத்துக் கொடுத்தார்.
ஆனால் அந்த இடத்திற்கு பின்னால் உள்ள சின்ன குழந்தை மகன் பழனி இன்றைக்கு தண்ணீர் குழாய் கேட்பார்கள். நாளைக்கு மின்சாரம் கேட்பார்கள். பின்பு இங்கேயே தங்கி விடுவார்கள் என்று சாதிக் காழ்ப்புணர்ச்சி கொண்டு அடியாட்களை வைத்து தொடர்ந்து எங்களை காலி செய்யச்சொல்லி மிரட்டிவருகிறார். அதுமட்டுமின்றி நாங்கள் ஆக்கிரமிப்பு செய்து வாழ்ந்து வருகிறோம் என்று கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்.
எனவே, அருந்ததியர் இன மக்களை ஒடுக்க நினைக்கும் பழனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அருந்ததியர் இன மக்கள் வசிக்கும் இடங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்” என்றும் கூறி தமிழ்ப்புலிகள் அமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
இதையும் படிங்க: மலையாள நடிகை சந்தேகத்திற்குரிய முறையில் மரணம்!