தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுப்புற பகுதிகளான நியூ டவுன், ஜனத்தாபுரம், செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே லேசான மழை பெய்து வந்தது. பிற்பகல் முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்தது.
இதனால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் மிதந்துகொண்டு சென்றன. இந்தத் தொடர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்நிலைகள் நிரம்பி விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் வாணியம்பாடி அடுத்த மாதகடப்பா காப்பு காடு பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் தாதன்கொல்லை, தரைக்காடு, இருளங்குத்து ஆகிய பகுதிகளில் உள்ள 6 சிற்றராறுகள் வழியாகச் சென்று ஆலமரத்து கணவாய் பகுதியில் பெரிய கானாராக உருவாகி இளைய நகரம், கொல்லகுப்பம் வடசேரி, சின்னபள்ளிகுப்பம் வழியாக ஆம்பூரில் உள்ள தேவலாபுரம் பாலாற்றில் கலக்கிறது.
இந்த நீரைச் சேமிக்க 6 சிற்றாறுகள் ஒன்று சேரும் பகுதியில் ஒரு பெரிய அணை கட்டி நீரைச் சேமித்தால் இளைய நகரம், கொல்லகுப்பம் வடசேரி, சின்னபள்ளிகுப்பம்,குமார மங்கலம் உள்ளிட்ட 8 ஊராட்சிகளில் உள்ள சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீராதாரமாகவும், பள்ளிப்பட்டு, மதனாஞ்சேரி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு ஆண்டு முழுவதும் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.