அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்ததாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து அவருக்குச் சென்னை, திருப்பத்தூர் உள்ளிட்ட 28 இடங்களில் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அவர் 654 விழுக்காடு சொத்து சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஜோலார்பேட்டையில் கே.சி.வீரமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்துவரும் நிலையில், அதிமுகவினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்விடத்திற்குச் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் முக்கிய ஆவணம் சிக்கியிருப்பதாக செய்தியளித்தார்.
இதனையறிந்த அதிமுக தொண்டர்கள் ஆத்திரமடைந்து நிருபர் மீதும் ஒளிப்பதிவாளர் மீதும் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.