திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், இரட்டைமலை சீனிவாசன் பேட்டையில் திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 26ஆம் தேதி புதியதாக திருப்பத்தூர் பதிவு மாவட்ட அலுவலகம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இன்று (மே 2) பத்திரப் பதிவுத்துறை ஐஜி சிவனருள் அங்கு வருகை தந்து முதல் பதிவுத்துறை குறைதீர்க்கும் முகாமினை தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர் வருவாய் மாவட்டங்களின் தலைமை இடங்களில் பதிவு மாவட்ட அலுவலகங்கள் இல்லாததால் பொதுமக்களின் வசதிக்காக புதிய பதிவு மாவட்ட அலுவலகங்கள் திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து வேலூர் மண்டலத்திற்கு உட்பட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆண்டியப்பனூர், குரிசிலாப்பட்டு, கூடப்பட்டு உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி எண்1 இணை சார்பதிவாளர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் பதிவுத்துறை சேவைகளை பெற்று வருகின்றனர்.
மேலும் வாரம்தோறும் திங்கள் கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பதிவுத்துறை வழங்கும் சேவைகளான பத்திரப்பதிவு, பத்திரம் திரும்பப்பெறுதல் உள்ளிட்டப் பல்வேறு சேவைகள் சம்பந்தமான புகார் மனுக்களை திருப்பத்தூரிலேயே கொடுக்கும் விதமாக புதிய அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முதல் பதிவுத்துறை குறை தீர்க்கும் முகாமை ஐஜி சிவனருள் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், நிர்வாகத் துறையின் மாவட்ட பதிவாளர் சுடரொளி, தணிக்கைத்துறையின் மாவட்டப் பதிவாளர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'திமுக எப்போதும் மக்களுக்காக குரல் கொடுக்கும்' - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்