திருப்பத்தூர் மாவட்டம் சிகரலபள்ளி கிராமத்தில் குடியிருப்புப் பகுதிக்கு அருகிலேயே கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு புதிதாக அரசு மதுபான கடை திறக்கப்பட்டது. இந்நிலையில் அக்கடையை மூடக்கோரி அப்பகுதி பெண்கள், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் அம்பலூர் செல்லும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்தப் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையினால் சுற்றுப்புறப் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான மதுப் பிரியர்கள், குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவதாகவும், இதனால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறினர்.
பின்னர் தகவலறிந்து வந்த வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
பொதுமக்கள் கலைந்துசென்ற உடன் அதுவரை மது வாங்க காத்திருந்த மதுப்பிரியர்கள் வரிசையாக நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் மீண்டும் தங்களுடைய போராட்டம் தொடரும் எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:மாடு மீது மோதிய இருசக்கர வாகனம்: இளைஞர் உயிரிழப்பு!