திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் கிராம பஞ்சாயத்து உட்பட்ட பள்ளிப்பட்டு பகுதியில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் பத்துக்கும் மேற்பட்ட தெருக்களில் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர். இதில் மூன்றாவது தெரு பகுதியில் சுமார் ஒரு ஆடி ஆழமாக மிகவும் தாழ்வான பகுதியாக உள்ளது. இந்த பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி ஏரி போல் காட்சியளிக்கின்றது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது;
"இதனால் குடிநீருடன் மழைநீர், கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுவது மட்டுமில்லாமல் தொற்றுநோய் பரவும் அபாய நிலையும் உள்ளது. இரவு நேரங்களில் குழந்தைகள், வயதானவர்கள் கொசு தொல்லையால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி இந்த பகுதியில் பிள்ளைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகின்றது. மருத்துவமனைக்கு சென்றால் கரோனாவாக இருக்குமா என்ற சந்தேகத்தில் எங்களை தனிமைப்படுத்தி வைக்கின்றனர்.
இது போன்ற துன்பங்களில் சிக்கி அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் பலமுறை கூறி வந்தோம். ஆனால், அதற்கு அவர் செவிசாய்க்கவில்லை. பின்னர் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு பலமுறை மனு மூலமாகவும் நேரில் சென்று கோரிக்கை வைத்தோம். அதற்கும் எந்த பதிலும் அளிக்கவில்லை. உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுத்து நோய்த் தொற்றில் இருந்து எங்களை காப்பாற்றுமாறு கோரிக்கை வைக்கிறோம்" என்றனர்.