திருப்பத்தூர்: ஆம்பூர் தென்னம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரஞ்சித் (33). திமுக ஊராட்சி பொறுப்பாளரான இவர், நேற்று (ஜூலை 31) மாலை தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மாட்டுத் தீவன பயிரை அறுத்து கொண்டிருந்தார்.
நாட்டு துப்பாக்கி சுட்டு காயம்
அப்போது, அங்கிருந்த ஆடுகளை, நாய்கள் துரத்திட்டு வந்துள்ளது அப்போது விவசாய நிலத்திற்குள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுக்க அவசர அவசரமாக சென்றுள்ளார். அப்போது நாட்டு துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் ரஞ்சித்தின் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், ரஞ்சித்தை மீட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருவர் மீது வழக்குப்பதிவு
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த உமராபாத் காவல் துறையினர், விசாரணை நடத்தினர். விசாரணையில், திமுக ஊராட்சி பொறுப்பாளரான ரஞ்சித்தும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது பெரியப்பா மகன் சோமநாதன் ஆகிய இருவரும் அனுமதியின்றி கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கியை பதுக்கிவைத்து அருகிலுள்ள வனப்பகுதியில் ஒன்றாக சென்று வனவிலங்குகளை வேட்டையாடி வந்தது தெரியவந்தது.
இது குறித்து கிராம நிர்வாக பொறுப்பு அலுவலர் ஜமுனா அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர், திமுக ஊராட்சி பொறுப்பாளர் ரஞ்சித், அவரது பெரியப்பா மகன் சோமநாதன் ஆகிய இருவரும் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு