திருப்பத்தூர்: திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். துபாயில் பணிபுரிந்து வரும் இவரிடம், அவரது உறவினர் முரளி காந்தி என்பவர், சுயதொழில் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். மேலும், டெக்ஸ்டைல்ஸ், கிரானைட் கல் பாலிஷ் செய்வது போன்ற தொழில் செய்வது மற்றும் தொழிற்சாலை அமைக்க இடம் வாங்குதல் உள்ளிட்டவைகளுக்காக பாக்கியராஜிடம் பணம் கேட்டுள்ளார்.
உறவினர் முரளியை நம்பி, பாக்கியராஜ் 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை, தான் சேர்த்து வைத்த ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு நாடு திரும்பிய பாக்கியராஜ், தொழில் குறித்து முரளியிடம் கேட்டுள்ளார்.
ஆனால், முரளி காந்தி எந்த தொழிலும் செய்யவில்லை என்பதை அறிந்த பாக்கியராஜ் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து, தான் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்த பாக்கியராஜ், மார்ச் 28, 2022ஆம் ஆண்டு நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், நாட்றம்பள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணையில், பாக்கியராஜ் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.79 லட்சம் டிரான்ஸ்பர் மற்றும் கையில் ரூ. 21 லட்சம் கொடுத்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, மோசடியில் ஈடுபட்ட முரளி காந்தியை காவல் துறையினர் தேடி வந்துள்ளனர். ஆனால், அவர் குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் பதுங்கி இருந்துள்ளார். இந்நிலையில், அவருடைய தொலைபேசி எண்ணை சோதனை செய்து வந்ததில், அவரை கிருஷ்ணகிரியில் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இந்த மோசடியில் உடந்தையாக இருந்த முரளி காந்தியின் மனைவி சந்தியா (37) என்பவரையும் கைது செய்து, இவர்களிடம் இருந்த 25 சவரன் தங்க நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்த ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜயகாந்தும் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலும்..!